ஒழிபியலில் உணர்த்தப்பட்ட யாப்பு உறுப்புக்கள்

ஒழிபியலில் உணர்த்தப்பட்ட யாப்பு உறுப்புக்கள்

செய்யுட்கண் பொருளைத் தழுவி அடிமுதற்கண் நிற்பது கூன் எனப்படும். இது அசைக்கூன், வீரக்கூன், அடிக்கூன் என மூவகைப்படும். இவ் அசைக்கூன் வஞ்சிப்பாவின் நடுவிலும் இறுதியிலும் மட்டும் வரும். சீர்க்கூன் நால்வகைப் பாவிலும் அடிமுதற்கண் மட்டுமே வரும். ஓரடியே கூனாக வருதல் சிறுபான்மையாகும். அசைக்கூனையும், சீர்க்கூனையும் தனிச்சொல் என்றும் குறிப்பிடுவர். வெண்பாவில் இவ்வுறுப்பு முதல் அடியில் முதற்கண் நிற்கும்.

(எ.டு உதுக்காண் சுரந்தாகை வண்கைச் சுவானமாப் பூதன்

பரந்தாரைப் பல்புகழைப் பாடி யிரந்தார்மாட்டு

இன்மை அகல்வது போல இருள்நீங்க

மின்னும் அளிதேர் மழை.

இவ்வெண்பாவினுள் அடிமுதற்கண் உதுக்காண் எனக் கூன் வந்துள்ளதைக் காணலாம். ஆசிரியப்பாவின் அடிமுதற்கண் இவ்வறுப்பு வரும். இவ்வாறே கலிப்பா, வஞ்சிப்பாக்களிலும் வரும்.

"உலகினுள்,

பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும்

இருந்தகைய இறுவரைமேல் எரிபோலச் சுடர்விடுமே

சிறுதகையார் சிறுதகைமை சிறப்பெனினும் பிறழ்வின்று

உறுதகைம உலகினுக்கோர் ஒப்பாகித் தோன்றாதே.

இத்தரவு கொச்சகக் கலிப்பாவில் அடிமுதற்கண் 'உலகினுள்' எனக் கூன் வந்தமையை அறிந்து கொள்ளலாம். வெண்பா, ஆசிரியம், கலிப்பா என்னும் இவற்றின் இடையிலும் இறுதியிலும் கூன் வரப்பெறாது எனக் கொள்ளுதல் வேண்டும்.

ஒழிபியலில் உணர்த்தப்பட்ட யாப்புறுப்புகள்

விகாரம், வகையுளி, வாழ்த்து, வசை, வனப்பு, பொருள். பொருள்கோள், குறிப்பிசை, செய்யுள், ஒப்புமை என்னும் ஒன்பது உறுப்புக்களும் உபதேச முறையான் உணர்தலென ஒழிபியலில் உணர்த்தப்பட்ட யாப்புறுப்புகளாகும்.

1. விகாரம்

செய்யுளின் சீர்க்கண் நின்ற எழுத்துக்கள் தளை, தொடை முதலியவை கெடாதிருக்க வேண்டி விகாரப்படுதலுண்டு. அவை வலித்தல், மெலித்தல், விரித்தல், தொடுத்தல், நீட்டல், குறுக்கல் எனபனவாகும்.

(எ.டு குறுந்தாட் பூதம் சுமந்த

அறக்கதிர் அழியெம் அண்ணலைத் தாழினே.

இதனுள் குறுந்தாள்' என்பது குறுத்தாள் என வலித்தால் விகாரமாய் வந்துள்ளது.

“தண்டை யினக்கிளி கடிவோள்

பண்டைய லிள்ளள் மானோர்க் கினளே"

இதனுள். 'தட்டை' என்பது தண்டை என வந்துள்ளதால் மெலித்தல் விகாரமாகும். இதே போல மற்றைய விகாரங்கள் அமையும்.

வகையுளி

முன்னும் பின்னும் அசை முதலாகிய உறுப்புகள் நிற்புழி அறிந்து குற்றப்படாமல், அவ்வப்பாக்களுக்குரிய ஓசையைப் பெறச் செய்வது வகையுளியாகும்.

(எ.டு கடியார்பூங் கோதை கடாயினன் திண்டேர்

சிறியார்தஞ் சிற்றில் சிதைத்து

இவ்வெண்பாவின் முதலடியில் 'கடியார்' எனவும் 'பூங்கோதை' எனவும் பிரித்தால் ஆசிரியத் தளையும் கலித்தளையும் வந்து வெண்பா இலக்கணத்துடன் மாறுபடும். எனவே, 'கடியார் பூம்' என்றும் 'கோதை' என்றும் கொண்டு வெண்சீர் வெண்டளையாகவும் இயற்சீர் வெண்டளையாகவும் கொள்ளுதல் வகையுளியாகும்.

வாழ்த்து

வாழ்த்து, மெய்வாழ்த்து, இருபுற வாழ்த்து என இரு வகைப்படும்.

கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும்

நீர்நிலை நின்ற பயன் கொலே கூர்நுனைவேல்

வண்டிருக்க நக்கதார் வாமன் வழுதியாள்

கொண்டிருக்கப் பெற்ற குணம்.

இது மெய் வாழ்த்தாகும்.

பண்டுமொருகால்தன் பைந்தொடியைக் கோட்பட்டு

வெங்கடத்து வில்லேற்றிக் கொண்குழந்தான் - தென்களந்தைப்

வாமான்கேர் வையையார் கோ.

இஃது இருபுற வாழ்த்தாகும்.

வசை

வசை, மெய்வசை. இருபுற வசை என இரண்டு வகைப்படும்.

தந்தையிலைச் சுமடன் றாய்தொழிலி தான் பார்ப்பான்

எந்தைக்கு இதுளங்ஙனம் பட்டதுகொல் - முந்தை

ஆவியுணவி னார்தெரியின் ஆவதாங் கொல்லோ

கவிக்கண்ண னார்தம் பிறப்பு.

இது மெய்வசை.

படையொடு போகாது நின்றெறிந்தான் என்றும்

கொடையொடு நல்லார்கண் தாழ்ந்தான் - படையொடு

பாடி வழங்கும் தெருவெல்லாம் தான்சென்று கோடி வழங்கும் மகன். இஃதுஇருபுற வசை. வனப்பு அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு. புலன், இழைபு என வனப்பு எட்டு வகைப்படும்.

"அம்மை யழகு தொன்மை தோல்விருந்த தியைபு புலனிழை பெனவனப் பெட்டே" என்பர் தொல்காப்பியர்.

1. அம்மை

சிலவாய, மெல்லியவாய சொற்களால் ஒள்ளியவாய பொருள்மேல் சில அடியில் அமைவதாகும்.

(எ.டு அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்

தன்னோய்போற் போற்றாக் கடை

2. அழகு

செய்யுட் சொல்லாகிய திரிசொற்களால் ஓசை இனியதாகப் பாடப்படுவது.

துணியிரும் பௌவங் குறைய வாங்கி

அணிகிள ரடுக்கல் முற்றிய எழிலி

காலொடு மயங்கிய கனையிருள் நடுநாள்

யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப

நெடுவரை மருங்கில் பாம்பென இழிதரும்

கடுவரற் கலுழிந்தி

வல்லியம் வழங்கும் கல்லதர் நெறியே.

இச்செய்யுளுள், அடுக்கல், ஓங்கல், வெற்ப, நெடுவரை முதலிய மலை என்னும் ஒரு பொருளைக் குறிக்கின்ற பல சொற்களாகும். இவ்வாறு அமைவது அழகாகும்.

3. தொன்மை

பழையதாகிய நிகழ்ந்தவற்றால் பாடப்படுவது தொன்மையாகும்.

"தொன்மைதானே

உரையொடு புணர்ந்த பழமை மேற்றே" என்பர் தொல்காப்பியர்.

(எ.டு மகாபாரதம், இராமாயணம்.

4. தோல்

'இழும்' என்னும் மென்மையாகிய சொற்களால் விழுமியவாய்க் கிடப்பனவும் எல்லாச் சொற்களாலும் பல வடிவாய்க் கிடப்பனவும் தோல் எனப்படும்.

பாயிருள் பரப்பகங் குறையப் பாம்பின்

ஆயிர மணிவிளக் கழலுஞ் சேக்கைக்

துணிதரு வெளிளத் துயில்புடை பெயர்க்கும்

ஒளியோன் காஞ்சி யெளிதெனக் கூறின்

இம்மை யில்லை மறுமை யில்லை

நன்மை யில்லை தீமை யில்லை

செய்வோ ரில்லை செய்பொரு ளில்லை

அறிவோர் யாரஃ திறுவுழி யிறுகென.

இப்பாடல் மார்க்கண்டேயனார் காஞ்சியாகும். இது இழுமெனும் மொழியில் விழுமியது நுவன்றது.

5. விருந்து

புதியனவற்றைப் பாடுவது விருந்து எனப்படும்.

"விருந்தே தானும்

புதுவது கிளந்த யாப்பின் மேற்றே"

என்பர் தொல்காப்பியர். இவ்விருந்து இப்பொழுது உள்ளாரைப் பாடுவதாகும்.

தற்காலத்தில் தோன்றும் புதிய இலக்கிய வகைகளை இதனுள் அடக்கிக் கொள்ளலாம்.

6. இயைபு

ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினோரு புள்ளிகளை ஈற்றெழுத்தாக வைத்துப் பாடப்படுவது இயைபு எனப்படும்.

(எ.டு) கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅ ரெனின்.

7. புலன்

இயற்சொல்லால் பொருள் தோன்றச் சொல்லப்படுவதாகும்.

குறவஞ்சி, பள்ளு, ஏற்றப்பாட்டு முதலியவற்றைச் சான்றாகக் குறிப்பிடலாம்.

8. இழைபு

வல்லொற்று யாதும் தீண்டாது. செய்யுளில் உடையாரால் எழுத்தெண்ணி அடி வகுக்கப்பட்ட குறளடி முதலாகப் பதினேழ் வகை ஐந்தடியும் முறையானே உடைத்தாய் ஓங்கிய சொற்களால் வருவதாகும்.

நான்கு எழுத்து முதல் ஆறு எழுத்து வரை குறளடி என்றும், ஏழு எழுத்து முதல் ஒன்பது எழுத்து வரை சிந்தடி என்றும், பத்து எழுத்து முதல் பதினான்கு எழுத்து வரை அளவடி என்றும் அழைக்கப் பெறும். அதேபோல் பதினைந்து எழுத்து மேல் பதினேழு எழுத்து வரை நெடிலடி என்றும் பதினெட்டு எழுத்து முதல் இருபது எழுத்து வரை உயர்ந்த மூன்றடியும் கழிநெடிலடி என்றும் செய்யுளியலார் கூறுவர்.

மேற்கூறிய வரையறையுடன் பொருந்தி வரும் பாடல்கள் இழைபு என்னும் வனப்பாகும்.

ஒழிபியலில் இரண்டாம் பகுதியாய் எல்லா நூலுக்கும் பொதுவான செய்திகள் இடம் பெற்றுள்ளன.

நூல் முதல், வழி, சார்பு என்னும் மூன்று வகைகளில் அமையும். நூலின் பயனாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கின் உறுதிப் பொருளை உணர்த்துவதாகும். உடன்படல், மறுத்தல், பிறர்மதம் மேற்கொண்டு களைதல், தாஅனாட்டித் தனாது நிறுத்தல், இருவர் மாறுகோள் ஒருதலைத் துணிதல், பிறர் நூல் குற்றம் காட்டல், பிறிதொடு படாஅன் தன் மதம் கொளல் என்னும் எழு வகை ஆசிரியர் மத விகற்பத்த தாய் குன்றக்கூறல், மிகைபடக்கூறல் முதலிய பத்து வகைக் குற்றங்களின்றி சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலான பத்து அழகுகளைப் பெற்று சூத்திரந் தோற்றல், சொல் வகுத்தல் முதலான பதின்மூன்று வகையான உரைகளைப் பெற்று நுதுலிப் புகுதல், ஒத்து முறைவைப்பு. தொகுத்துச் சுட்டத் தொடங்கி உய்த்துணர வைப்பு என முடியும் முப்பத்திரண்டு தந்திர உத்தியோடும் அமைப்பது நூலாகும். இந்நூல் பற்றிய செய்திகள் நன்னூல் பொதுப் பாயிரத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அப்பகுதியில் கண்டு தெளிக.

பொருள்கோள்

செய்யுளில் அமையும் சொற்கள் தொடர்ந்து பொருளுணர்த்தும் நிலையைப் பொருள்கோள் என்பர். இது ஒன்பது வகைப்படும். அவை முறையே, நிரல்நிறை மொழிமாற்று, சுண்ண மொழிமாற்று, அடிமறி மொழிமாற்று, அடிமொழிமாற்று, பூட்டுவில் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள்கோள், அளைமறியாப்புப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள் என்பனவாகும்.

1. நிரல்நிறை மொழிமொற்று

நிரல் என்பது வரிசையாகும். வரிசையாக நின்று பொருள் கொள்வது நிரல்நிறைப் பொருள்கோளாகும். இது பெயர் நிரல்நிறை, வினை நிரல்நிறை என்று இரண்டு வகைப்படும்.

2. சுண்ணமொழிமாற்று

செய்யுளில் உள்ள சொற்களைச் சுண்ணம் போல் பிரித்தெடுத்து முன்னும் பின்னும் பொருள் நோக்கிச் சேர்த்துப் பொருள் கொள்ளுவது.

3. அடிமறி மொழிமாற்று

செய்யுளின் அடிகளை மாற்றியமைத்தாலும், அச்செய்யுளின் ஓசையும் பொருளும் பிழையாது வருவது.

4. அடிமொழிமாற்று

இரண்டு அடிகளைக் கொண்ட பாடலைப் பிரித்து, மாற்றியமைத்துப் பொருள் கொள்ளுவது.

(எ.டு ஆலத்துமேல குவளை குளத்துள

வாலி னெடிய குரங்கு.

இதனை. "ஆலத்துமேல வாலி னெடிய குரங்கு" எனவும், "குவளை குளத்துள" எனப் பொருளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளுதல் வேண்டும். இப் பொருள்கோள் நன்னூலில் கூறப்படாதது ஆகும்.

5. பூட்டுவிற் பொருள்கோள்

ஒரு செய்யுளின் முதற்சொல்லும் இறுதிச்சொல்லும் அச்செய்யுளில் உள்ள மற்றைய சொற்களின் பொருளைப் பூட்டி நிற்பது.

6. புனல்யாற்றுப் பொருள்கோள்

ஆற்றின் நீரொழுக்கைப் போன்று அடிதோறும் பொருள் விட்டு விட்டுப் பொருள் கொள்ளுவது புனல்யாற்றுப் பொருள்கோளாகும்.

7. அளைமறியாப்புப் பொருள்கோள்

புற்றிலே தலை வைத்து மடங்கிப் படுத்துக் கொண்டிருக்கும் பாம்பினைப் போன்று செய்யுளின் இறுதியில் நின்ற சொல் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளுதல்.

8. தாப்பிசை

தாம்புக் கயிறால் கட்டப்பட்ட ஓர் ஊஞ்சல் இரு பக்கங்களிலும் சென்று வருவதைப் போல், பாடலின் இடையில் நின்ற சொல் இரு பக்கங்களிலும் சென்று பொருள் கொள்ளுதல்.

9. கொண்டுகூட்டுப் பொருள்கோள்

ஒரு செய்யுளில் பல அடிகள், பல சொற்கள் இருப்பினும் ஏற்ற சொற்களை அதற்கேற்ற சொற்களுடன் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுவது.

இங்கு மேற்கூறிய ஒன்பது வகைப் பொருள்கோளில் அடிமொழிமாற்றுப் பொருள்கோளைத் தவிர மற்ற வகைகளுக்கு உரிய எடுத்துக்காட்டுகளை நன்னூல் சொல்லதிகாரம் பொதுவியலில் கண்டு கொள்க.

குறிப்பிசை

எழுத்தில்லாத ஓசையால் வரும் முக்குதல், சீட்டி அடித்தல், குறிப்பொலி முதலியன செய்யுளில் வந்தால். அவற்றையும் செய்யுள் நடை சிதையாமல் அசை, சீர், அடி, தொடை ஆகியன பிழையாமல் அலகிட்டு வழங்கப்படுவது குறிப்பிசையாகும்.

(எ.டு மன்றலங் கொன்றை மலர்மிலைந்து உஃது அஃது

என்று திரியும் இடைமகனே - சென்று

மறியாட்டை உண்ணாமை வன்கையால் வல்லே

அறியாயோ வண்ணாக்கு மாறு.

என்னும் நேரிசை வெண்பாவில் அஃகு வஃகு என்பது குறிப்பிசையாகும்.

ஒப்பு

முன்னர்க் கூறப்பட்டுள்ள சீர், தளை, அடி, பா, பாவினம் ஆகியவை சொன்ன இலக்கணத்தில் திரிந்தும், மிக்கும் குறைந்தும் வரினும் அவற்றை ஒருபுடை ஒப்புமை நோக்கி அவ்வச் செய்யுட்களின் பகுதியில் அடக்கி அப்பெயரிட்டு வழங்குவர்.

(எ.டு கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டும்

தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ

ஆழிசூழ் வையத்தெம் அண்ணல் அடியேத்திக்

கூழை நனையக் குடைந்தும் குளிர்புனல்

ஊழியு மன்னுவாம் என்றேலோ ரெம்பாவாய்.

இச்செய்யுள் ஐந்தடியால் அமையினும் ஒருபுடை ஒப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின் பாற்படுத்து வழங்கப்படும். இதனைத் தரவு கொச்சகக் கலிப்பா எனினும் தவறில்லை.

வண்ணம்

இது ஓசையைக் குறிக்கும். இவ் வண்ணங்கள் நூறு ஆகும்.

தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம் என்னும் ஐந்தினை முதலாகவும். அகவல், ஒழுகிசை, வல்லிசை, மெல்லிசை என்னும் நான்கு வண்ணங்களை இடையாகவும் வைத்து, குறில், நெடில், வல்லிசை, மெல்லிசை, இடையிசை என்னும் ஐந்து வண்ணத்தையும் கடையாக வைத்துக் கூட்டி உறழ நூறு வண்ணங்கள் அமையும்.

தூங்கிசை வண்ணம்

குறிலகவல் தூங்கிசை, நெடிலகவல் தூங்கிசை, வலியசுவல் தூங்கிசை, மெலியகவல் தூங்கிசை, இடையகவல் தூங்கிசை என்றவாறு இவ் வண்ணங்கள் அமையும். இதேபோன்று ஒழுகல், வல்லிசை, மெல்லிசை என்னும் மூன்றினையும் சேர்க்க தூங்கிசை வண்ணம் இருபதாக அமையும்.

இந்நிலை போன்றே ஏந்திசை. அடுக்கிசை, பிரிந்திசை, மயங்கிசை ஆகியவற்றிற்கும் அமையின் இவ்வகை வண்ணங்களின் விரிவு நூறாக அமையும்.

தொல்காப்பியர் வண்ணத்தை இருபது எனக் கூறியுள்ளார். 'வண்ணந்தானே நாலைந்தென்ப என்று குறிப்பிட்டு அவற்றின் வகைகளையும் இலக்கணங்களையும் கூறியுள்ளார். அவற்றைப் பற்றி தொல்காப்பியத்திலும் யாப்பருங்கல விருத்தியிலும் கண்டு கொள்ளுதல் வேண்டும்.

புனைந்துரை

ஒரு பொருளின் அமைப்பை அதன் இயல்பிற்கு மேல் பெரியதனைச் சுருக்கிச் சொல்லுதலும் சிறியதனைப் பெருக்கிச் சொல்லுதலும் புனைந்துரையாகும்.

அடையார் பூங்கோதைக் கல்குலும் தோன்றும்

புடையார் வனமுலையும் தோன்றும் - இடையாதும்

கண்டு கொள்ளா தாயினும் காரிகை நீர்மையாட்கு

உண்டாக வேண்டு நுகப்பு.

இது பெரியதனைச் சுருக்கிய புனைந்துரையாகும்.

அடியின்றி நடப்பன

பாட்டு, நூல், மந்திரம், பிசி, முதுசொல், அங்கதம், வாழ்த்து என்னும் ஏழும் அடிவரையறையின்றி

ஓரடியானும் பலவடியானும் நடப்பவையாகும்.

"அவைதாம்

பாட்டுரை நூலே மந்திரம் பிசியே

முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும்

ஆகுக என்ப அறிந்திசினோரே."

என்னும் தொல்காப்பிய நூற்பா அடியின்றி நடப்பன பற்றிய வகைகளைக் குறிப்பிடுகிறது. எழுத்துப் பதின்மூன் றிரண்டசை சீர்முப் தேழ்தளைய இழுக்கி லடிதொடை நாற்பதின் மூன்றைந்து பாவினமுன் றொழுக்கிய வண்ணங்கள் நூறொன்பது ஒண்பொருள் கோளிருமூ வழக்கில் விகாரம் வனப்பெட்டியாப்புள் வகுத்தனவே. இக்காரிகை நூற்பா (46) யாப்பருங்காரிகையில் இதுவரை வகுத்த பொருளையெல்லாம் தொகுத்து உணர்த்தியது.

1. எழுத்து - பதின்மூன்று. அவை குற்றெழுத்து. நெட்டெழுத்து, உயிரெழுத்து, குற்றியலிகரம். குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஆய்தம். மெய்யெழுத்து. வல்லினம், மெல்லினம், இடையினம். உயிர்மெய், அளபெடை ஆகியன.

2. அசை - இரண்டு, அவை, நேரசை, நிரையசை.

3. சீர்- முப்பது. ஈரசைச்சீர் நான்கும் மூவசைச் சீர் எட்டும். நாலசைச் சீர் பதினாறும். ஓரசைச் சீர் இரண்டும் சேர்த்து முப்பது சீராகும்.

4. தளை - ஏழு. அவை, நேரொன்றாசிரியத் தளை, நிரையொன்றாசிரியத் தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை, கலித்தளை ஆகியன.

5. அடி - ஐந்து, அவை, குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி ஆகியன.

6. தொடை - நாற்பத்து மூன்று. அவை, அடிமோனை, அடிஎதுகை, அடிமுரண், அடியியைபு. அடியளபெடை, அந்தாதித்தொடை, இரட்டைத்தொடை, செந்தொடை என்னும் எண்வகைத் தொடையும் இணைமோனை முதலாகிய முப்பத்தைந்து தொடை விகற்பமும் சேர்ந்து தொடை நாற்பத்தி மூன்றாகும்.

7. பாவகை - ஐந்து. அவை, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா ஆகியன.

8. பாவினம் - மூன்று. அவை, தாழிசை, துறை, விருத்தம்,

9. ஒழுக்கிய வண்ணம் நூறு. குறிலகவல் தூங்கிசை வண்ணம் முதலாகக் கூறப்பட்ட நூறு வண்ணங்கள்.

10. இருமூ வழக்கில் விகாரம் - வலிக்கும் வழி வலித்தல் முதலியன.

11. வனப்பு எட்டு, அவை, அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு ஆகியன.

மேற்கூறிய காரிகையில் "ஐந்திழுக்கிலடி" என்று சிறப்பித்ததனால், திணை வழுவும். பால் வழுவும், மரபு வழுவும், வினா வழுவும். விடை வழுவும் ஆகும்.

'வழக்கில் விகாரம்' என்று சிறப்பித்ததனால் எழுத்துக் குற்றம், சொல் குற்றம், பொருட் குற்றம், யாப்புக் குற்றம், அலங்காரக் குற்றம், ஆனந்தக் குற்றம் என்னும் ஆறு குற்றமும் புணர்க்கப்படும் செய்யுட்கள் எனக் கொள்ளுதல் வேண்டும்.

மேற்கூறிய ஆறு குற்றங்களில் எழுத்து முதலிய ஐந்தையும் அவ்வவ் இலக்கண நூல்களில் கண்டு கொள்ளுதல் வேண்டும். இக்காரிகை நூலில் ஆனந்தக் குற்றம் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன.

ஆனந்தக் குற்றம்

செய்யுளில் எழுத்து, சொல், பொருள், யாப்பு முதலியன திரிந்து வருதல் ஆனந்தக் குற்றமாகும்.

"எழுத்துநிலை திரிந்த எழுத்து ஆநந்தமும்

சொல்நிலை திரிந்த சொல் ஆநந்தமும்

பொருள்நிலை திரிந்த பொருள் ஆநந்தமும்

யாப்புநிலை திரிந்த யாப்பு ஆநந்தமும்

நடைபெறு புலவர் நாட்டின ரவையே."

என்பது ஆனந்தக் குற்றத்தின் இலக்கணத்தையும் வகைப்பாட்டினையும் எடுத்துரைக்கிறது.

எழுத்தாநந்தம்

ஆழி இழைப்பப் பகல்போம் இரவெல்லாம் தோழி துணையாத் துயர்தீரும் - வாழி நறுமாலை தாராய் திரையவொஓ என்னுஞ் செறுமாலை சென்றடைந்த போது. இந்நேரிசை வெண்பாவில் 'திரையவோஓ' என்று இயற்பெயரைச் சார்ந்து அளபெழுந்தமையால்

எழுத்தாநந்தம் ஆகும்.

சொல்லாநந்தம்

என்னிற் பொலிந்தது என்றெண்ணிச்

தன்னிற் குறைபடுப்பான் தண்மதியம் - மின்மினி

விரிந்திலங்கு வெண்குடைச் செங்கோல் விசயன்

எரிந்திலங்கு வேலின் எழும்.

இந்நேரிசை வெண்பாவில், தலைமகன் மேல் 'எரிந்தது' என்னும் சொல் புணர்ந்தமையால்

சொல்லாநந்தம் ஆகும்.

பொருளானந்தம், யாப்பாநந்தம் ஆகியவற்றையும் வந்த வழிக் கண்டு கொள்ளுதல் வேண்டும்.

இறப்ப உயர்ந்த ஆநந்த உவமை

இழிந்த பொருளை உயர்ந்த பொருளுடன் உவமைப்படுத்துவது.

"இந்திரனே போலும் இளஞ்சாத்தன் சாத்தற்கு

மந்தரமே போன்றிலங்கு மல்லாகம் - மந்தரத்தில்

தாழருவி போன்றுளது தார்மாலை அம்மாலை

ஏழுலகும் நாறும் இணர்."

இந்நேரிசை வெண்பாவில், சாத்தன் என்னும் கீழ்மகனை அரசரை உவமித்தாற் போல உவமித்தமையால், இறப்ப உயர்ந்த ஆநந்த உவமையாகும்.

இழிந்த ஆநந்த உவமை உயர்ந்த பொருளுடன் இழிந்த பொருளை உவமைப்படுத்துவது.

"வள்ளையிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழாம்

எள்ளி இரிந்தாற்போல் எவ்வழியும் - வள்ளற்கு

மாலார் கடலன்ன மண்பரந்த வாட்டாளை

மேலாரு மேலார் விரைந்து."

இந்நேரிசை வெண்பாவில், புலியினோடு உவமிக்கப்படுகின்ற தலைமகனாகிய வீரனோடு நாயை உவமித்தமையால், இறப்ப இழிந்த ஆநந்த உவமையாகும்.

"இறப்ப இழிந்ததும் இறப்ப உயர்ந்ததும்

அறத்தகை வழீஇய ஆநந்த உவமை" என்று குறிப்பிடுவர்.

அலங்காரக் குற்றம்

செய்யுளில் உவமைக்கு மேலும் உவமை கூறுவது அலங்காரக் குற்றமாகும்.

"உவமைக்கு உவமை இல்லென மொழிப" என்று கூறுவர்.

(எ.டு வெண்டிங்கள் போன்றிலங்கு வெண்சங்கு சங்கனைய

வண்டிலங்கு தாழை வளர்தோடு - விண்டெங்கும்

கள்ளாவி நாறும் கருங்கழிசூழ் கானகத்தெம்

உள்ளாவி வாட்டும் உரு.

இந்நேரிசை வெண்பாவில் வெண்திங்கள் போலும் சங்கு, சங்கு போலும் தாழைப்பூ என்று உவமைக்கு உவமை சொன்னமையால், அடுத்துவரல் உவமை என்னும் அலங்காரக் குற்றமாகும்.

எல்லாக் குற்றமும் தீர்ந்த செய்யுள்

தாமரை புரையுங் காமர் சேவடிப்

பவளத் தன்ன மேனித் திகழொளிக்

குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்

நெஞ்சுபக எறிந்த செஞ்சுடர் நெடுவேல்

சேவலங் கொடியோன் காப்ப

ஏம வைகல் எய்தின்றா லுலகே.

பிற்சேர்க்கை

கலிப்பாவின் இனங்களான கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை முதலியவை கலிப்பாவின் இனங்களைக் கூறும் செய்யுளியல் பகுதியில் இடம்பெறவில்லை. பிற்காலத்தே வழங்கப்பெற்ற இவ்விரண்டிற்கும் இலக்கணம் கூறும் முகமாய் இப்பிற்சேர்க்கைப் பகுதி அமைந்துள்ளது.

கட்டளைக் கலிப்பா

முதற்சீர் மாச்சீரும் பின் மூன்று சீரும் கூடிய அரையடியும், அவ்வாறே பின்வரும் நான்கு சீர் கூடியது அரையுடியுமாக அமைந்த வெண்சீரடி நான்குடையதாய் முதலசை நேரசையாயும், அரையடிக்கு எழுத்து பதினொன்றாயும் நிரையசையாயின் பன்னிரண்டும் பெற்று ஏகாரத்தால் முடிவது கட்டளைக் கலிப்பாவாகும். இது எழுத்து அளவைப் பெறுதலால் கட்டளைக் கலிப்பா எனப்பட்டது.

(எ.டு)இல்லை யென்ப திலையோர் மருங்கிலே

எவ்வ றங்களும் உண்டோர் மருங்கிலே

கொல்லு கின்றது எழுதருங் கூற்றமே

கூறு மாற்றம் எழுதருங் கூற்றமே

வில்லுமேற்றிடு நாணும் பொன் னாகமே

விடுகணைக் குண்டு நாணும்பொன் னாகமே

மல்லன் மார்பின் மணிமுத்த மென்பதே

வாச மையர்க்கு அவிழுத்த மென்பதே

"படுத்த பாயுட னேபிணி மூழ்கினும்

பல்விழுந்து நரைத்தற மூப்பினும்

அடுத்தது இங்கிவர்க் கேபெரு வாழ்வெனும்

அப்பெ ரும்பதி எப்பதி என்பிரேல்

விடுத்து விட்டுஇந் திரதிரு வும்புவி

வெண்கு டைக்குள் இடுமர சாட்சியும்

கடுத்த தும்புகள் அந்தரைத் தேடுவார்

காத லித்துவ ரும்திருக் காசியே. (காசிக்கலம்பகம்)

கட்டளைக் கலித்துறை

ஐஞ்சீரடி நான்காய் ஒவ்வோரடியிலும் முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாமல் இருக்க இறுதிச்சீர் கூவிளங்காய், கருவிளங்காய் என்பனவற்றுள் ஒன்றாகப் பெற்று முதற்சீரின் முதலசை நேராயும், ஓரடிக்கு எழுத்து பதினாறும். நிரையாயின் பதினேழும் உடைத்தாய் ஏகாரத்தான் முடிவது கட்டளைக் கலித்துறையாகும். இது எழுத்தளவைப் பெறுதலால் பெற்ற பெயராகும். இக்கட்டளைக் கலித்துறைக்குக் கோவைக் கலித்துறை. திலகக் கலித்துறை முதலான வேறு பெயர்களும் உண்டு. அப்பர் திருவிருத்தமும், நம்மாழ்வார் திருவிருத்தமும் இச்செய்யுள் வகைக்குச் சான்றாகும்.

"அடியடி தோறும் ஐஞ்சீ ராகி

முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக்

கடையொரு சீரும் விளங்கா யாகி

நேர்பதி னாறே நிரைபதி னேழென்று

ஓதினர் கலித்துறை ஓரடிச் கெழுத்தே."

என்னும் செய்யுள் கட்டளைக் கலித்துறைக்குரிய இலக்கணத்தினைக் கூறியது.

(எ.டு

அற்றாரைத் தாங்கிய வைவேல் அசதி அணிவரைமேன்

முற்றா முகிழ்முலை எவ்வாறு சென்றனள் முத்தமிழ் நூல்

கற்றார் பிரிவும்கல் லாதார் இணக்கமுங் கைப்பொருளொன்று

அற்றார் இளமையும் போலக் கொதிக்கும் அருஞ்சுரமே.

கரும்பஞ் சுரும்புஞ் அரும்பும் பொருபடைக் காமர்வில்வேள்

இரும்பும் கரைந்துரு கச் செய்யு மால்இறும் பூதுஇதுஅன்றே

விரும்பும் பெரும்புலி யூர்எம்பி ரானருள் மேவிலொரு

துரும்பும் படைத்தழிக் கும்அகி லாண்டத் தொகுதியையே. (சிதம்பரச் செய்யுட்கோவை)

(அசதிக்கோவை

மேற்கூறிய செய்யுட்களில் கட்டளைக்கலித்துறை பயின்று வந்துள்ளமையை அறிய முடிகின்றது.

M. Harisankar

B.Com From V.O Chidambaram College, Thoothukudi - Graduated 2022.

Post a Comment

Previous Post Next Post

Popular Items